டெல்லி: இந்திய ராணுவ தளபதி நரவனே  3நாள் பயணமாக நேபாள நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.  அப்போது நோபாள நாட்டுக்கு அவர் மருத்துவ உதவி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா – நேபாளம் இடையே உரசல்கள் நீடித்து வரும் நிலையில், நேபாளத்தின் 5 மாவட்டங்களில் 150 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில்,   இந்திய ராணுவ தளபதி நரவானே 3 நாள் பயணமாக நேபாள நாட்டுக்கு இன்று புறப்பட்டு  சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா நேபாளம் இடையே எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், ராணுவ தளபதி நரவனே நேபாளம் சென்றுள்ளார். அங்கு  அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோரை  சந்திக்க உள்ளதாகவும், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளுடன் எல்லை பிரச்சினை குறித்து  பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, நேபாள ராணுவ தலைமையகத்துக்கு செல்லும் நரவனே, அங்கு நேபாள ராணுவ வீரர்கள் கல்லூரியில் இளம் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்ற இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து, அந்நாட்டு ராணுவ தளபதி பூர்ணசந்திர தாப்பா அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரிய வழக்கப்படி, நரவானேவுக்கு ‘நேபாள ராணுவ தளபதி’ என்ற கவுரவ பதவியை ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி  நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்க இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை)  நேபாள பிரதமர் சர்மா ஒலியை நரவானே  சந்தித்து பேச இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.

நரவனே தன்னுடன் மருத்துவ உதவிகளையும் நேபாள நாட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  அங்கு கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் உள்பட  பல்வேறு வகையான மருந்துகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய தொகுப்பை அவர்களுக்க வழங்க இருப்பதாகவும்,  கொரோனாவோடு போராடும் அண்டை நாடுகளுக்கு உதவுவது இந்திய அரசின் அர்ப்பணிப்பு என்று  “நேபாளத்தில் உள்ள இந்திய மிஷனின் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார். நாளை (வியாழக்கிழமை)  காலை நேபாள ராணுவ தலைமையகத்தில் நடைபெறும் கதவு விழாவின் போது இந்த உதவி ஒப்படைக்கப்படும் என்று அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து கடந்த மே மாதத்தில் நேபாளம் புதிய வரைபடம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நரவனேவின் பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.