டில்லி

டில்லி நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஜெனெரேட்டர்கள் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

நாட்டின் தலைநகர் டில்லியில் அளவுக்கு அதிகமாகக் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகினார்கள்.   கொரோனா ஊரடங்கு காரணமாக மாசு குறைந்தது.  ஆனால் டில்லியின் சுற்றுப்புற மாநிலங்களான அரியானா, பஞ்சாப், உபி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து அதிகரிப்பு, விவசாய கழிவுகள் எரிப்பு போன்றவற்றால் தற்போது காற்றில் மாசு அதிகரித்துள்ளது.

எனவே இன்று முதல் டில்லியில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றால் இயங்கும் மின்சார ஜெனரேடர்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.  அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இதைத் தவிரப் பனிப்பொழிவு காரணமாகக் குளிர் காய்வதற்காக சாலை ஓரம் குப்பை மற்றும் மரக்கட்டைகளை எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதற்கு மக்களில் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  மேலும் அண்டை மாநிலங்களால் டில்லியில் காற்று மாசு அதிகரிப்பதால் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.   மேலும் காற்று மாசு காரணமாக பலர் நடைப்பயிற்சி செய்யாமல் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.