”இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் டேவிட் கோவர், கெவின் பீட்டர்ஸனை விட ஜோ ரூட் அதிகமான ரன்கள் அடிப்பார் என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள். ஜோ ரூட்டால் 200 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாட முடியும். சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ள ரன்களை விட அதிகமாகச் சேர்க்க முடியும்

தற்போது ரூட்டுக்கு 30 வயதுதான் ஆகிறது. 99 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். 8,249 ரன்கள் குவித்துள்ளார். நீண்ட காலத்தில் ஜோ ரூட் பெரிதாக ஏதும் காயத்தால் அவதிப்படாத நிலையில், நிச்சயம் சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ள பல சாதனைகளையும், 15,921 ரன்களையும் முறியடிப்பார் என நம்புகிறேன். ஆனால், ஜோ ரூட்டை எந்த வீரருடன் ஒப்பிட்டுப் பேச விரும்பவில்லை.

ஜோ ரூட்டின் சமகால வீரர்களான விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்ஸன் ஆகியோரும் சிறந்த வீரர்கள். அவர்களும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ரன்களைக் குவித்து வருகிறார்கள். ஜோ ரூட்டின் பேட்டிங்கை மட்டும் ரசிப்போம். மற்ற வீரர்கள் விளையாடும்போது ரூட்டைக் கவனிப்போம். கடந்த காலத்திய வீரர்களோடு ரூட்டை ஒப்பிடக் கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு சூழலின் படைப்பாகும்.

இலங்கை பயணத்துக்கு முன்பாக ரூட் பெரிதாக ஏதும் ஸ்கோர் செய்யவில்லை. கரோனா லாக் டவுன் காலத்தில் ரூட் ஏராளமான பேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். நீண்டகாலமாகவே ரூட் டி20 போட்டிகளில் மட்டும் களமிறங்கி வந்தார். டி20 கிரிக்கெட்டிலிருந்து விடுபட்டு வெளியே வரத்தான் கடுமையாகப் பயிற்சி செய்தார்.

டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு பந்திலும் ரன் சேர்க்க வேண்டும் என ரூட்டின் உள்மனசு சொல்லும். லென்த்தில் விழும் நல்ல பந்தைக்கூட தேர்ட் மேன் திசையில் தட்டிவிட்டு, ரன் எடுக்க முயல்வார். மிகவும் நல்ல பந்துகளை மட்டும் ரூட் தடுத்து ஆடுவார். பெரும்பாலும் டாட் பந்துகள் இல்லாமல் தவிர்த்து ரன்களைச் சேர்க்கவே ஜோ ரூட் விரும்புவார்.

ரூட்டுக்கு மிகப்பெரிய பரிசோதனை ஆஸ்திரேலிய களத்தில்தான் இருக்கிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கும்போதுதான் ரூட்டின் முழுமையான டெஸ்ட் திறமை வெளிப்படும்”. என்றுள்ளார் ஜோ ரூட்.