வடக்கு பசிபிக் பெருங்கடல் தீவில் இருக்கும் எரிமலை மீது இடி விழுந்ததை முதன்முறையாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

மழைகாலத்தின் போது இடி, மின்னல் ஏற்படுவது இயல்பானது. அந்த இடி விழுந்து பச்சை மரங்கள் தீ பிடிப்பதும், மின்கம்பங்கள், கோபுரங்கள் இடிந்து விழுவதும் அவ்வப்போது  நிகழ்வதும் உண்டு.  ஆனால், வரலாற்றில் முதன் முறையாக எரிமலை மீது இடி,மின்னல் விழுந்ததை விஞ்ஞானிகள் பதிவு செய்து இருக்கின்றனர்.

வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில், 300க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டது அலூசியன் தீவுகள். இங்கு கடந்த வருட இறுதியில் வானம் மேகமூட்டத்துடன், பெரும் இடிஇடித்துக் கொண்டிருந்தது. இந்த இடி ஒலியை புவிஇயற்பியல் விஞ்ஞானிகள் ஒலிபதிவு செய்து விட்டு, பின்னர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது வழக்கத்துக்கு மாறாக இடி ஒலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த  குறிப்பிட்ட நாள், மணி நேரத்தைக் கொண்டு, அன்றைய தினத்தில் தீவில் நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்தனர். அப்போது தான், எரிமலை மீது இடி விழுந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்தனர்.

இது குறித்து புவிஇயற்பியல் விஞ்ஞானிகள், “ சம்பவத்தன்று குறிப்பிட்ட எரிமலையில் இருந்து 40 மைல் தொலைவில் இருந்து பூம் மைக் மூலம் ஒலிப்பதிவு செய்தோம்.  காதை பிளக்கும் இந்த இடியின் ஒலி, வழக்கமான இடியின் ஒலியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது”  என்றனர். மேலும், எரிமலை மீது இடி விழுந்த இந்த சம்பவம் வரலாற்றில் முதன்முறையாக தற்போது பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

இந்த அலூசியின் எரிமலைகள் கடந்த டிசம்பர் 2016 முதல் ஆகஸ்ட் 2017 வரையில் மட்டும் 60 தடவை எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.