கொரோனா தொற்றை மோப்பத்தின் மூலம் கண்டறியும் ஜெர்மன் ஷெபர்டு நாய்கள்!

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்றை, ஜெர்மன் ஷெபர்டு வகை நாய்கள், 96% வரை துல்லியமாக கண்டறியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இதுதொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவானது, ‘பிளஸ் ஒன்’ என்ற விஞ்ஞான இதழில் பிரசுரம் செய்யப்பட்டது.

அந்த ஆய்வு குறித்து கூறப்படுவதாவது;  கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய நாய்களுக்கு எளிதில் பயிற்சி அளிக்க முடியும். இவை 96% துல்லியத்துடன் வைரஸ் தாக்கம் ஒரு மனிதனின் உடலில் உள்ளதா, இல்லையா? என்று தனது மோப்ப சக்தி மூலம் கண்டறியும். உலகம் முழுவதும் நாய்களை இதற்காகப் பயன்படுத்தலாம்.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களது சுவாசத்துக்கும், செலுத்தப்படாதவர்களது சுவாசத்துக்கும் இடையே, அந்த நாய்கள் வித்தியாசம் கண்டறியும். இதனை கண்டறிவதற்காக தடுப்பு மருந்து வாசனை தடவப்பட்ட டீ ஷர்ட் மற்றும் சாதாரண டீ ஷர்ட் ஆகியவை ஒரு இரவு முழுவதும் நாய்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட டீ ஷர்ட்டை நாய்கள் சரியாக எடுத்து வந்துள்ளன.

வைரஸ் தாக்கம் இல்லாதவர்களுக்கு சுவாசத்தில் வித்தியாசமான வாசம் வீசும். அதேசமயம் வைரஸ் தாக்கம் உள்ளவர்களது சுவாசக் காற்றில் வேறு விதமான வாசம் வீசும். இதனை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் எளிதில் கண்டறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.