முதல் உலகப்போரின் போது புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்கரைப்பகுதியில் கிடைத்துள்ளது.

submarine

முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன் நாட்டிற்கு சொந்தமான யுசி-61 என்ற நீர்மூழ்கிக்கப்பல் கூட்டுப்படையினரால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் கடலினுள் மூழ்க்கியது. போர் முடிவடைந்த நிலையில் அந்த கப்பல் கைவிடப்பட்டதால் அதனை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு 1930ம் ஆண்டு இந்த நீர்மூழ்கி கப்பல் முழுவதுமாக கடலில் புதைந்தது.

இந்நிலையில் 1917ம் ஆண்டு நடைபெற்ற முதல் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட யுசி-61 நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்பகுதிகளில் கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு பிரான்ஸ் துறைமுகமான விஸாண்ட் பகுதியில் இந்த கப்பலின் புதையுண்ட பாகங்கள் கிடைத்துள்ளன.

submarine12

முதல் உலக போரில் புதையுண்ட நீர்மூழ்கி கப்பல் கிடைத்துள்ள செய்தி பரவியதை தொடர்ந்து அதனை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. குழுவாக சென்று தரைதட்டிய கப்பலை பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் மேயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி அதிகாரிகள் கூறுகையில், “ கடலின் அலைகள் குறைவாக இருக்கும் போது நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் தெரிய தொடங்கின. தொடர்ந்து காற்றடிக்கும் வேகத்திற்கு ஏற்றார்போல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கப்பலின் எஞ்சிய பாகங்கள் தெரிய தொடங்கியது. ஆனால், பலமான காற்று வீசும்போது மீண்டும் கப்பலின் பாகங்கள் மறைந்துவிடும் “ என தெரிவித்தனர்.

போரினால் சிதைந்து பூமியில் புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களை யு-போட்ஸ் என அழைக்கின்றனர். முதலாம் உலகப் போரின்போது கூட்டணிப் படைகளால் குறிவைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலினுள் மூழ்கடிக்கப்பட்டன.