பெர்லின்:

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனியன் கமிஷன் கடந்த 21-ம் தேதி ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 27-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கோண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று முதல் (27-ம் தேதி) ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

முதல் நாடுகளாக ஐரோப்பிய யூனியனின் ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய 3 நாடுகளிலும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடும்பணி தொடங்க உள்ளது.

101 வயது நிரம்பிய எடித் குவாஷிலா என்ற மூதாடிக்கு ஐரோப்பிய நாடுகளில் முதல் நபராக தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக வயதானோருக்கும், முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.