ஃப்ராங்க்ஃபர்ட்

ஜெர்மன் நாட்டின் ஹெசே மாநில நிதி அமைச்சர் கொரோனாவால் நிதி நிலை ஏற்பட்டுள்ள  நெருக்கடியால் அச்சம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளதைப் போல் ஜெர்மனியிலும் பல மாநிலங்கள் உள்ளன.  அவற்றில் ஃப்ராங்க்ஃபர்ட் நகர் உள்ள ஹெசே மாநிலமும் ஒன்றாகும்.  இங்கு நிதி அமைச்சராக தாமஸ் ஸ்கேபர் பணி புரிந்து வந்தார்.  சுமார் 54 வயதாகும் அவர் நேற்று இரவு ஒரு ரயில்வே தண்டவாளம் அருகில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இது குறித்து மாநில ஆளுநர் வோல்கர் பவுஃபியர், “கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜெர்மன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை எவ்வாறு சரி செய்வது என தாமஸ் ஸ்கேஃபர் பெரிதும் வருத்தமும் அச்சமும் கொண்டிருந்தார்.  இந்த கவலையால் அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹெசே மாநிலத்தில் அந்நாட்டின் பொருளாதார தலைநகரம் என அழைக்கப்படும் ஃப்ராங்க்ஃபர்ட் நகரம் அமைந்துள்ளது.  இங்குப் பல வங்கிகள் அமைந்துள்ளன.  மரணமடைந்த தாமஸ் ஹெசே மாநில அமைச்சராக  10 வருடங்கள் பணி புரிந்துள்ளார்.  அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.