எஸ்பிபி விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்… ரஜினி உருக்கம் – வீடியோ

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்  என நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டு உள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது உடல்நிலை கடந்த இரு நாட்களுக்கு முன்பு மோசமடைந்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த நிலையில், பின்னர் அவர் உடல்நலம் தேறி விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும்  மருத்துவமனை நிர்வாகம்  அறிக்கை வெளியிட்டு  உள்ளது.

இந்த நிலையில்,நேற்று அவரது மகன் சரண் கூறுகையில் அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எஸ்பிபி விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என உருக்கமான வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில், ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் பல மொழிகளில், தன் இனிமையான குரலால் பாடி,  கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அவர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, அபாயக் கட்டத்தை தாண்டிட்டாரு என்று கேள்விப்பட்டதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிக்சையில இருக்கிறார். எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்  என தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவும், சீக்கிரம் எழுந்து வா பாலு என்று உருக்கமான வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.