‘கெத்து’ வார்த்தை சிலப்பதிகாரத்தில் இருக்கிறது! தமிழக அமைச்சர் ஒப்புதல்

சென்னை:

சிலப்பதிகாரத்தில் கெத்து, வெச்சு செய்வது  போன்ற வார்த்தைகள் இருந்தது என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடித்த’ கெத்து’ படத்துக்கு தமிழக அதிமுகஅரசு கெத்து  என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று கூறி கேளிக்கை வரி விலக்கு தர மறுத்தது. தற்போது  கெத்து தமிழ் வார்த்தைதான் என்று கூறி உள்ளது.

தமிழ் இணைய மாநாடு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “தற்போது உலகில் உள்ள செம்மொழிகளில் சீன மொழியும், தமிழ் மொழியும்தான் அதிகம் பேசக்கூடிய மொழியாக இருக்கின்றன.

தற்போதைய இணைய உலகில் ஆங்கிலமே அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக கூறியவர்,  0.01 சதவீதம்தான் தமிழ் பயன்படுத்தப்படுகிறது என்று வருத்தம் தெரிவித்தவர், மாணவர்கள் தங்கள் அன்றாட பயன்பாட்டில் தமிழை அதிகம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘தொடர்ந்து பேசியவ்ர, தமிழக மாணவர்கள்  தெரிந்தோ, தெரியாமலோ ‘கெத்து’ , ‘வெச்சி செய்வது’ போன்ற வார்த்தைகளை பிரபலப்படுத்தி உள்ளனர். ஆனால், அந்த வார்த்தைகள் எல்லாம் புதியவை அல்ல. ஏற்கனவே சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் காப்பியங்களில் அவை இடம்பெற்றுள்ளன” என்று பேசியுள்ளார்.

அமைச்சரின் பேச்சு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன்,  மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கெத்து என்பது தமிழ் வார்த்தைதான் என கண்டுபிடித்துள்ள அதிமுக அரசுக்கு என் வாழ்த்துக்கள்  என்றும்,  ஆனால்,  கெத்து  தமிழ் வார்த்தைதான் என  2016 ஆம் ஆண்டே நான் வாதாடியதாகவும்,  உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது  என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.