யநாடு

பிரதமர் மோடியும் கோட்சேவும் ஒரே கொள்கையை நம்புவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கல்பேட்டா நகரம் உள்ளது.  இந்த நகரத்தில் இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் ஒரு பேரணியை நடத்தியது.  அரசியலமைப்பைக் காப்போம் எனப் பெயரிடப்பட்ட இந்த பேரணியில் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

ராகுல் காந்தி தனது உரையில், “பிரதமரிடம் எப்போது வேலை இன்மை குறித்து கேள்வி எழுப்பினாலும் அவர் உடனடியாக நமது கவனத்தைத் திசை திருப்புவார்.  குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டால் மக்களுக்கு வேல வாய்ப்பு கிடைக்காது.  காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களைப் பற்றி எரிய வைப்பதால் நமது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது.

இந்திய மக்கள் தங்களை இந்தியன் என அறிவிக்க மோடி யார் எனக் கேள்விகள் கேட்கின்றனர்.  ஒருவர் இந்தியர் என்பதையும் இந்தியர் அல்லாதவர் என்பதையும் குறித்து முடிவு எடுக்க மோடிக்கு யார் உரிமை அளித்தது எனவும் நான் இந்தியன் என்பது எனக்குத் தெரியும் எனவும் வேறு யாருக்கும் அது குறித்து நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர்கள் கூறி உள்ளனர்.

ஆனால் மோடி இதை எல்லாம் ஒப்புக் கொள்வதில்லை.  மோடியும் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவும் ஒரே கொள்கையை நம்பி வருகின்றனர்.  ஆனால் மோடி தாம் கோட்சேயின் கொள்கைகளை நம்பி பின் பற்றுவதாக ஒப்புக் கொள்ளத் தைரியம் இல்லாமல் இருக்கிறார்.

கோட்சே தன் மீது நம்பிக்கை இல்லாததால் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றார். அவர் யாரையும் விரும்பியதில்லை,  யாரையும் நம்பியதில்லை,  யார் மீதும் கவனம் கொள்ளவில்லை.   அதைப் போலவே நமது பிரதமரும்  தம்மை மட்டுமே விரும்புகிறார்,  தம்மை மட்டுமே நம்புகிறார்.  நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பேச்சைக் கேட்க விரும்பவில்லை”  எனத் தெரிவித்துள்ளார்.