தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பு : எதிர்க்கட்சி தலைவரின் பகீர் புகார்

டில்லி

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் கூறிஉள்ளார்.

ராஜ்யசபையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.    நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த தீர்மானத்தின் மீது உரை ஆற்றினார்.

அப்போது அவர், “ தற்போது நாடு மிகவும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.    எங்களைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.    ஆளும் பாஜக அரசு அமுலாக்கத் துறை, வருமானவரித்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ ஆகியவைகளை ஏவி விட்டு எதிர்கட்ட்சிகளை மிரட்டி வருகிறது.

இது போல ஒரு அரசியல் ஜனநாயகத்துக்கும் நமது நாட்டுக்கும் நல்லது இல்லை.   தற்போது நம் நாட்டில், எழுத்து சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது.   சமுதாயத்தை பிரிக முத்தலாக் சட்டம் இயற்றப் பட்டுள்ளது.” எனக் கூறினார்.

குலாம் நபி ஆசாத் கூறிய புகாருக்கு பதில் அளித்த அனந்தகுமார், “எதிர்க்கட்சித் தலைவர் கூறியவை அனைத்தும் தவறானது.    அவர் கூறுவது போல் எதிர்க்கட்சி தலைவர்கள் போன் ஒட்டுக் கேட்கப்படவில்லை.   அது ஆதாரமற்ற குற்றாச்சாட்டு” என கூறி உள்ளார்.