‘கொலைக்குத் தூண்டிய போதைப்பாக்கு’..

‘கொலைக்குத் தூண்டிய போதைப்பாக்கு’..

மது நோயாளிகளுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல, போதைப்பாக்கு அடிமைகள்.

வடநாட்டு ஆசாமி ஒருவர், ஊரடங்கு காரணமாக,தெருவில் நடமாட முடியாத நிலை உள்ளதால், ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) பறக்க விட்டு, பக்கத்துத் தெருவில் இருந்து போதைப்பாக்கை (பான் ) தருவித்து போலீசாரிடம் சிக்கி இருவருமே கம்பி எண்ணும் கதையை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போதைப்பாக்கு நோயாளி, அந்த வஸ்து கிடைக்காததால், கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளார்.

கான்பூர் பகுதியில் உள்ள நவீன்நகர் என்ற இடத்தை சேர்ந்த அந்த ஆசாமியின் பெயர், நிதின் பாண்டே.

அவர் வீட்டுக்கு எதிரில் பிரேம் திவாகர் என்பவர் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

’லாக்டவுண்’ காரணமாக அவர் கடையை அடைத்துள்ளார்.

இந்த நிலையில் நிதின் பாண்டே, கடையைத் திறந்து

‘ பான் பொட்டலங்கள் தருமாறு , பிரேமை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் ’’கடையைத் திறந்தால் போலீஸ் பிடித்துக்கொண்டு போய் விடும்’ என்று சொல்லி, மறுத்து விட்டார், பிரேம்.

கோபம் அடைந்த நிதின், பக்கத்தில் கிடந்த இரும்பு தடியால் பிரேமை துவைத்து எடுத்து விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிரேம் அங்கு இறந்து போனார். இப்போது நிதினை போலீசார் தேடிவருகின்றனர்.

– ஏழுமலை வெங்கடேசன்