டில்லி

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.

பிரதமர் மோடிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக நாடெங்கும் உள்ள பலரும் பரிசுப் பொருட்களை ஏராளமாக வழங்கி உள்ளனர். இவை அனைத்தையும் டில்லியில் உள்ள தேசிய மாடர்ன் ஆர்ட் காலரி ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கே என்னும் கங்கை சுத்திகரிப்பு திட்டத்டுக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்த பொருட்கள் நேரடியாக வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நேரடி ஏலத்தில் மிஞ்சிய பொருட்கள் ஆன்லைன் ஏலத்தில் விற்கப்பட உள்ளது. இந்த ஆன்லைன் ஏலம் வரும் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆன்லைன் ஏலம் www.pmmementos.gov.in என்னும் இணைய தளத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த ஏலத்தில் விடப்படும் ஆயிரக்கணக்கான பொருட்கள் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு டில்லியில் உள்ள ஜெய்ப்பூர் இல்லத்தில் அமைந்துள்ள தேசிய மாடர்ன் ஆர்ட் காலரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப் பொருட்களில் ஓவியங்கள், சிலைகள், சால்வைகள், ஜாக்கெட்டுகள், மற்றும் புராதன இசைக்கருவிகள் உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களை www.pmmementos.gov.in இணைய தளத்திலும் பார்வை இட முடியும்.