சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்பு! சுஷ்மா சுவராஜ் பயணம் ரத்து!!

--

 

சிங்கப்பூர்:

சிங்கப்பபூரில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் காரணமாக,  மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா தனது சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தார்.

சிங்கப்பூரில் இன்று நடைபெற இருந்த ‘இந்தியப் பெருங்கடல் மாநாடு 2016’ல்  இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்பதாக இருந்தது.

சிங்கப்பூரில் உள்ள 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக வந்த தகவலையடுத்து சுஷ்மா பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று 26 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிகா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் சுகாதரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

giha virus

இதற்கிடையில் ஜிகா வைரஸ் பரவலின் காரணமாக, சிங்கப்பூருக்கு யாரும் செல்ல வேண்டாம என அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அந்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியா, தென் கொரியா, சீனாவின் தைவான் உள்ளிட்ட நாடுகளும் தம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடுகளை சமீப காலமாக மிரட்டி வந்த இந்த வைரஸ் தற்போது கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்குகூட நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்குதல் காரணமாக சமீக காலமாக சிறிய தலையுடன் நிறைய குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு ( WHO- டபிள்யூஎச்ஓ) உலக நாடுகளுக்கு ஜிகா வைரஸ் பற்றி  எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கிடையில் சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் காரணமாக நோய்கள் பரவ தொடங்கி உள்ளதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறி உள்ளது.

சிங்கப்பூர் வாழ்ந்து வரும் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தனது பயணத்தை சுஷ்மா சுவராஜ் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காணொளி காட்சி வாயிலாக சிங்கப்பூரில் நடக்கவுள்ள இந்திய கடல்சார் மாநாட்டின் நிகழ்ச்சிகளில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.