யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள ஒட்டகச் சிவிங்கியின் பிரசவம்!

நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஒரு விலங்கு சாகசப் பூங்காவில், ஒட்டகச் சிவிங்கி ஒன்று கன்று ஈனுவதை, யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், அந்த ஒட்டகச்சிவிங்கி கன்று ஈன்றதை ஒளிபரப்பினர். அதை, உலகம் முழுவதும் பல லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

அந்த ஒட்டகச் சிவிங்கி தற்போதும் சினையாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கன்று பிறக்கலாம் என்ற நிலை உள்ளது.

உலகெங்கிலும், குறிப்பாக ஆஃப்ரிக்காவில், ஒட்டகச் சிவிங்கிகளின் எண்ணிக்கை, பெருமளவில் குறைந்தவரும் இந்த இக்கட்டான சூழலில், மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுவதாக, அந்தப் பூங்கா உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆஃப்ரிக்காவில், இன்றைய நிலையில், 1,00,000 க்கும் குறைவான ஒட்டகச் சிவிங்கிகளே வாழ்வதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முயற்சி பணத்திற்காகத்தான் என்று வரும் விமர்சனங்களை அந்த உரிமையாளர் மறுக்கிறார். சிலரோ, புதிதாகப் பிறக்கப்போகும் குட்டியும், கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கப்போகிறது என்று தமது மன வருத்தத்தை பதிவு செய்கின்றனர்.

– மதுரை மாயாண்டி