கோட்டா, பீகார்.

நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர், தேர்வில் தேர்ச்சியடைய மாட்டோம் என்னும் அச்சத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

பீகாரில் உள்ள கோட்டாவில் நீட் தேர்வுக்காக பல பயிற்சி மையங்கள் உள்ளன.  இதில் ஒரு மையத்தில் பயிற்சி பெற்றவர் இஷிகா ராஜ் என்னும் 17 வயதுப் பெண்.  இவர் பீகாரின் சமஸ்டிப்பூர் பகுதியை சேர்ந்தவர்.  கோட்டாவில் ஒரு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார்.

அவருக்கு தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  தேர்ச்சி பெறாவிடில் பெற்றோர் மனம் உடைந்து போவார்கள் என்னும் எண்ணமும் தோன்றி உள்ளது.   இப்படி ஒரு மனக்குழப்பத்தில் இஷிகா நேற்று தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் பிணமாக தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்த மற்றொரு மாணவி இதனை விடுதி உரிமையாளருக்கு தெரிவித்தார்.  விடுதி உரிமையாளர் போலிசுக்கு தகவல் அனுப்ப, அவர்கள் வந்து சடலத்தை கைப்பற்றினர்.   அவர் இறக்கும் முன்பு எழுதிய கடிதமும் கிடைத்தது.

அந்தக் கடிதத்தில் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டோம் என்பது தெரிந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும்,  தனது பெற்றோரின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாமைக்கு மன்னிப்பு கோருவதாகவும் இஷிகா எழுதி இருந்தார்.

இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.  இன்று அவர்களின் வருகைக்குப் பின் பிரேத பரிசோதனை நிகழும்.

மேற்க்கண்ட தகவல்களை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  சுமார் 1,50,000 பேருக்கு மேல் கோட்டாவில் நீட் தேர்வுப் பயிற்சி மையங்களில் படிக்கிறார்கள்.  இங்கு படிப்பவர்களுக்கு நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி கிட்டும் என நம்புகிறார்கள்.  ஆனால் கோட்டாவில் இந்த வருடத்தில் இது மூன்றாவது தற்கொலையாகும்.   சென்ற வருடம் கோட்டாவில் இது போல 17 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டனர்.