பா.ஜனதாவின் சாமியார் மீது குற்றம் சுமத்திய மாணவி மாயம்

லக்னோ: முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவருமாகிய சுவாமி சின்மயானந்த் மீது குற்றம் சுமத்திய உத்திரப்பிரதேச மாநிலத்தின் எஸ் எஸ் சட்டக் கல்லூரி மாணவி அவரின் கல்லூரி விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

அந்த மாணவி கடந்தவாரம் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தன்னிடம் சாமியாரை பாதிக்கக்கூடிய வகையிலான ஆதாரங்கள் இருப்பதால், தன்னையும் தன் குடும்பத்தினரையும் அழித்துவிடுவதாக சாமியார் தரப்பினர் மிரட்டுவதாக புகார் கூறியிருந்தார்.

உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்திலுள்ள அந்த சட்டக் கல்லூரியின் இயக்குநராக இருப்பவர் அந்த சாமியார் சின்மயானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆகியோரிடம் அவர் உதவி கேட்டிருந்தார். அந்த சாமியார் பல மாணவிகளின் வாழ்வை சீரழித்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த சாமியாரை யாரும் அசைக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

கடந்த 23ம் தேதி இந்த வீடியோவை வெளியிட்ட அந்தப் பெண், 24ம் தேதியிலிருந்து காணாமல் போயிவிட்டார். அப்பெண்ணின் தந்தை இதுகுறித்து போலீசிடம் புகார் கொடுத்திருந்தும் இன்னும் வழக்குப் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.