டாக்கா

ங்கதேசப் பள்ளி தலைமை ஆசிரியரால் நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

வங்கதேசம் டாக்கா நகருக்கு தெற்கே 160 கிமீ தொலைவில் ஃபெனி என்னும் ஒரு சிறிய நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள இஸ்லாமிய பள்ளியான மதரசாவில் 19 வயதான நுஸ்ராத் என்னும் மாணவி பயின்று வந்துள்ளார். இவர் அந்த ஊரில் உள்ள ஒரு ஆசாரமான இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று அந்த மதரசாவின் தலைமை ஆசிரியர் மாணவி நுஸ்ராத்தை தனதுஅறைக்கு அழைத்துள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவியை தவறான நோக்கத்துடன் பல இடங்களில் தொட்டு பேசி உள்ளார். மாணவி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையால் மனம் நொந்த நுஸ்ராத் இது குறித்து தனது வீட்டினர் மற்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதை ஒட்டி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரி ஒரு பிரிவினர் தெருக்களில் போராட்டம் நடத்தினனார்கள்.   இந்த போராட்டத்தை நடத்திய இரு ஆண் மாணவர்களும் உள்ளூர் அரசியல் வாதிகளும் கைது செய்யப்பட்டு ஊரே அமளி ஆனது. இதனால் ஊர் மக்கள் நுஸ்ரத் க்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது தேர்வை எழுத தனது சகோதரருடன் நுஸ்ரத் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய சகோதரரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நுஸ்ரத் மட்டும் சென்றுள்ளார். அவருடன் படிக்கும் மாணவி ஒருவர் மாடிக்கு வரச் சொல்லி அழைத்து சென்றுள்ளார். அங்கு நான்கைந்து புர்கா அணிந்தவர்கள் நுஸ்ரத் தனது புகாரை திரும்ப பெற வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

அதற்கு நுஸ்ரத் மறுத்ததால் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர். அவர் மீது தீப்பற்றியதும் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். நுஸ்ரத் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரை அழைத்து வந்தவர்கள் நுஸ்ரத் தற்கொலைக்கு முயன்றதாக கூறி உள்ளனர். ஆனால் நுஸ்ரத் மரண வாக்குமூலத்தில் நடந்ததை கூறி உள்ளார். சிகிச்சை பலனின்றி நுஸ்ரத் மரணமடைந்தார்.

நுஸ்ரத் மரணம் வஙகதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்ணிய ஆர்வலர்கள் இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் நேரடியகா கொலையில் சம்பந்தப் பட்டவர்கள் ஆவார்கள். இந்த 15 பேரில் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இரு மாணவர்களும் உள்ளனர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கொல்லப்பட்ட மாணவி நுஸ்ரத் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். அத்துடன் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட யாரையும் சட்டம் விடுவிக்காது எனவும் அனைவர் மிதும் சட்டபூர்வ தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.