ரேபரேலி

ன்னாவ் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது லாரி மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் ஆவார்.  இவருடைய வீட்டில் பணியாற்றிய பெண்ணை இவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் புகார் அளித்தார்.   அதையொட்டி அந்தப் பெண்ணின் தந்தை தாக்கப்பட்டார்.  அதன் பிறகு கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை சிறையில் மரணம் அடைந்தார்.

இதற்கு ஏதும் நடவடிக்கை எடுக்காத உ.பி. போலீசை கண்டித்து அந்தப் பெண் முதல்வர் யோகி ஆதியநாஅத் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.  அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு குல்தீப் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    தனக்கு ஆபத்து உள்ளதாக அந்த பெண் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகார் கூறிய பெண் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் ரேபரேலிக்கு சென்றுக் கொண்டிருந்துள்ளார்.  வேகமாக வந்த லாரி ஒன்று இந்தக் காரில் பயங்கரமாக மோதி உள்ளது.  அந்த லாரியின் பதிவு எண் கருப்பு வண்ணம் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.    இந்த விபத்தில் பெண்ணின் தாயும் ஒரு உறவினரும் மரணம் அடைந்துள்ளனர்.

புகார் கூறிய பெண்ணும் வழக்கறிஞரும் படு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருவரும் உயிருக்கு அபாயமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது..    இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனர் மற்றும்  உதவியாளரைக் கைது செய்துள்ளனர்.    பதிவு எண் மறைக்கப்பட்டிருந்தது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இது குறித்து காவல்துறை அதிகாரி, ஓ பி சிக், “லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரின் தொலைபேசி அழைப்புக்களை ஆராய்ந்து வருகிறோம்.  இது ஒரு விபத்து என தற்போதைக்கு தோன்றுகிறது.  ஆனால்  அந்தப் பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அவருடன் யாரும் வராதது குறித்து விசாரணை நடைபெறுகிறது.” என தெரிவித்துள்ளார்.