பீகார் காப்பகத்தில் சிறுமிகள் வன்கொடுமை: பாராளுமன்றத்தில் காங். ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

டில்லி:

பீகாரில் உள்ள காப்பகத்தில் 40  சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் மற்றும் காரணமாக,  பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பீகார் முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கி படித்து வந்த சுமார் 40 சிறுமிகள், அந்த காப்பகத்துக்கு நன்கொடை வழங்குபவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாகவும், ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும், அங்கு தங்கியிருந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கூறியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளியே  தெரிய வந்தது

இதையடுத்து, காப்பக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..  இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை, அந்த காப்பகத்தில், சிறுமி புதைக்கப்பட்டதாக கூறும் இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதற்காக காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. ஜே.பி.யாதவ் ஆகியோர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர்.

இதேபோல் மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் நிகழும் வன்முறைகள் தொடர்பாக மக்களவையில் ஜீரோ அவரில் விவாதிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. முகமது சலீம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

பீகாரில் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.