சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: பீகாரில் உள்ள 17 காப்பங்கள் குறித்தும் சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

--

முசாபர்நகர்:

பீகாரில் உள்ள காப்பம் ஒன்றில் இருந்த சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக உச்சநீதி மன்றம் கடுமையாக சாடியிருந்தது.

இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள 17 காப்பங்கள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும்,   வழக்கு குறித்து மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையையும் உச்சநீதி மன்றம் நிராகரித்து உள்ளது.

பாராளுமன்றத்திலும், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பீகார் முசாபர்நகர் காப்பகத்தில் தங்கியிருந்து படித்து வந்த வாய்பேச முடியாத  சிறுமிகள் 34 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க கப்பட்டனர். இந்த காப்பக உரிமையாளரான பிரிஜேஷ் தாகூர் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்க மானவர் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதையடுத்து வழக்கை மாநில காவல் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி நீதிபதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கில் மேற்கொண்டு மாநில அரசு மேல்நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.  அதைத்தொடர்நது, காப்பகத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூர் உள்பட 11 பேர் மீது முசாபர்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் உச்சநீதி மன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கு குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

காப்பக வன்கொடுமை குற்றவாளி பிரிஜேஷ் தாகூர்

அடுத்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 377 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பில் இருந்து வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மாநில அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய மர்வு மாநிலத்தில் செயல்பட்டு வரும் 17 காப்பங்கள் தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்தி உத்தரவிட்டது. இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை உச்சநீதி மன்றம் நிராகரித்து உள்ளது.