சென்னை

சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் காதலன் இல்லாத பெண்களுக்கு அனுமதி இல்லை எனப் போலி சுற்றறிக்கை வெளியானதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காட்டாங்குளத்தூரில் எஸ் ஆர் எம் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.  மிகவும் புகழ் பெற்ற இந்த கல்வி நிலையத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக மாணவிகளிடையே ஒரு சுற்றறிக்கை பரவத் தொடங்கியது.   இந்த சுற்றறிக்கை காதலைப் பரப்புவோம் என்னும் தலைப்பில் அமைந்திருந்தது.

அந்த சுற்றறிக்கையில், “எஸ் ஆர் எம் கல்வி நிலையத்தில் பயிலும் அனைத்து மாணவிகளுக்குப் பல்கலை வளாகத்துக்குள் ஒரு காதலன் இருக்க வேண்டியது அவசியமாகும். இது பெண்களின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்படுகிறது.  காதலன் இல்லாத பெண்களுக்கு வளாகத்தின் உள்ளே நுழைய அனுமதி இல்லை. அவர்கள் தங்களது காதலனின் தற்போதைய புகைப்படத்தை உள்ளே நுழையும் போது காட்ட வேண்டும்” என இருந்தது.

ஜனவரி 22 ஆம் தேதி வெளியான இந்த போலி சுற்றறிக்கையில் பதிவாளர் சேதுராமன் கையொப்பம் இருந்துள்ளது.  அத்துடன் இந்த சுற்றறிக்கையில் பல்கலை வேந்தர், தலைவர் உள்ளிடோர் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.  இவை அனைத்தும் உண்மையான சுற்றறிக்கை போலவே தோற்றத்தில் காணப்பட்டுள்ளதால் கடும் குழப்பம் ஏற்பட்டது.

இதையொட்டி எஸ் ஆர் எம் நிர்வாகம் இந்த சுற்றறிக்கையைத் தயாரித்தோர் மற்றும்  பரப்பியோர் நீக்கப்படுவார்கள் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் இது குறித்து காவல்துறைக்குப் புகார் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.   ஏற்கனவே நிர்வாகம் கோவிட் 19, கல்லூரி திறப்பு குறித்து சமூக வலைத் தளங்களில் சுற்றறிக்கை வெளியிடுவதால் சில விஷமிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். என பதிவாளர் தெரிவித்துள்ளார்.