“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு

மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தனது சகோதரரை சிகிச்சைக்காக அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

அங்கு, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத காரணத்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது, மேலும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இடவசதி, சிகிச்சைக்கான மருந்து, ஆக்சிஜன் ஆகிய அனைத்தும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பல செய்திகள் வந்தபோதும், இதுவரை அரசு அதனை மறுத்து வருவதுடன், என்ன மாதிரியான உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் மவுனம் காத்துவருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சரின் இந்த ட்வீட் பதிவு, உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவும் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

இதற்கு பதிலளிக்கும் வகையில், மற்றொரு பதிவிட்டிருக்கும் வி.கே.சிங் “பாதிக்க பட்ட நபர் எனது உறவினர் என்பதை குறிக்கவே சகோதரர் என்று கூறினேன், அதன் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அல்லது மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே அந்த பதிவை நான் போட்டேன், மற்றபடி அவர் எனது சொந்த சகோதரர் இல்லை, மேலும் அது மறுபதிவு செய்யப்பட்ட ட்வீட்” என்று விளக்கமளித்துள்ளார், கையோடு அந்த பதிவையும் நீக்கி இருக்கிறார்.

இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதுடன், தனது தொகுதியில் உள்ள தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவருக்கு மருத்துவமனையில் இடமில்லை என்பதற்காக ட்விட்டர் மூலம் முயற்சி மேற்கொண்டவர், தனது தொகுதியில் சாமானியர்கள் படும் துயரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.