லண்டன்:

குழந்தைகளை வளர்ப்பதில் பெண்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு அந்தந்த பருவத்தில் ஏற்படும் நோய்களுக்கு கை வைத்தியம் என்ற பெயரில் மூதாதையர்கள் வீட்டிலேயே அதற்கான மருந்துகளை தயாரித்து குணப்படுத்தி வந்தார்கள். ஆனால், தற்போது சிறு தும்மல், விக்கல், அழுகை, இருமல், சளி போன்று எதற்கெடுத்தாலும் குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.

இதனால், குழந்தைகள் நல மருத்துவகர்களிடம் நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை உட்கொள்வதால் குழந்தைகளின் உடலில் அதிகளவில் நச்சு உருவாகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

‘‘இருமல் மருந்து மற்றும் மாத்திரைகள் கொடுப்பதால் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக கொ டுப்பதால் நச்சு உருவாகும்’’ என்று லண்டனில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவம் மற்றும் குழந்தை நலக் கல்லூரியின் டாக்டர் ஆலினர் பெவிங்டன் தான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அக்கல்லூரியின் பயிற்சியாளர் குழுவுக்கு தலைமை வகித்த அவர் மேலும் கூறுகையில், ‘‘இருமல் மருந்துகள் சரியான முறையில் வேலை செய்யும் என்பதற்கு இது வரை எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த மருந்துகள் இருமலை உடனடியாக நிறுத்துமே ஒழிய அவற்றை குணமடைய செய்யாது. இருமலை நிறுத்துவது என்பது எதிர்மறையான விளைவுகளை தான் ஏற்படுத்தும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும் சமயத்தில் ஓய்வு எடுப்பது மட்டுமே சிறந்தது. நீர் ஆகாரம் மற்றும் பெரசிட்டமால் அல்லது இபுப்ரோபென் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இருமல் மருந்துகளில் நாசி டிகன்கெஸ்டான், ஆண்டி ஹிஸ்டமின்கள், இருமல் அடக்குவான் போன்ற செயலி பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது.

இதை அதிகளவில் உட்கொள்வதன் மூலம் நச்சுக்கள் உடலில் உருவாகும். குறிப்பாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகளவில் இருக்கும். அதனால் இருமல் மருந்துகள் குழந்தைகளுக்கு கெடுதலை தான் ஏற்படுத்தும். அதனால் இருமல் ஏற்படும் போது முந்தைய பாரம்பரியப்படி தேன் மற்றும் எலுமிச்சையை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது பெற்றோருக்கு நான் வழங்கும் ஆலோசனையாகும்’’ என்றார்.