கொல்கத்தா

மாநில அரசுக்கு அளித்துள்ள நிதிகளுக்கான கணக்குகளைக் கேட்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது.   மத்திய அரசும் மம்தா பானர்ஜியும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர்.   பல மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதையொட்டி மேற்கு வங்க மாநில அரசு ஏற்கனவே அளித்துள்ள எந்த ஒரு நிதிக்கும் கணக்கு வழங்கவில்லை என மத்திய அரசு  பதில் அளித்தது.  அத்துடன் அதற்கான கணக்குகளை முழுமையாக அளிக்கும் வரை மேலும் நிதி உதவி அளிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்ததாக திருணாமுல் காங்கிரஸார் கூறி வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மத்திய அரசு அளித்த நிதி உதவிகளுக்கான கணக்குகளை அளிக்குமாறு எங்களைக் கேட்கிறது.  முதலில் அவர்கள் பிஎம் கேர்ஸ் நிதியின் கணக்கை அளிக்க வேண்டும்.  அதன் பிறகு எங்களிடம் கணக்குகளைக் கேட்க வேண்டும்.

ஒரு நாள் திடீரென்று மத்திய அரசு திடீரென விழித்துக் கொண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றை எடுத்து எங்களை துயரத்துக்குள்ளாக்கும்.  இந்த முடிவுகள் எதுவும் எந்த மாநிலத்துடனும் விவாதித்து எடுக்கப்பட்டுள்ளவை ஆகும். “ எனக் கூறி உள்ளார்.