சபரிமலைக்கு பெண் காவலர்களை கொடுத்து உதவுங்கள்: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கேரள அரசு கடிதம் ! 

சபரிமலையில் பணியாற்ற பெண் காவலர்களை கொடுத்து உதவுமாறு தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி முக்கிய தீர்ப்பளித்தது.  இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவஸம் போர்டு தெரிவித்து. பிறகு, சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸம் போர்டின் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். மேலும் சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில்  சபரிமலையில் பணியாற்ற பெண் காவலர்களை பாதுகாப்புக்கு அனுப்பக்கோரி தமிழகம் உள்ளிட்டஐந்து  மாநிலங்களுக்கு கேரள அரசு கடிதம் அனுப்பியிருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று பெண் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாகவும்,  நவம்பர் மாதம் நடைபெறும் விழாவில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க தலா 30 பெண் காவலர்களை அனுப்பும்படியும் தமிழகம், புதுவை, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு கேரள அரசு தலைமை செயலர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதையடுத்து விரைவில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது உறுதியாகி உள்ளது.