சென்னை:

கொரோனா தடுப்பு நிதிக்கு அதிக அளவு பணம் தேவைப்படுவதால், குடியரசுத் தலைவர் முதல் அனைத்து எம்.பி.க்களின் சம்பளத்திலும் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்றும், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு கிடையாது என்றும் மத்தியஅரசு அதிரடியாக அறிவித்தது.

மத்தியஅரசின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், திமுக, கம்யூனிஸ்டு, வி.சி.க போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. (கமிஷன் கிடைக்காது என்ற வருத்தமாக இருக்கலாம்)

ஆனால்,  எம்.பி.க்களின் ஊதியம் குறைப்பு தொடர்பாக எடுத்திருக்கும் முடிவு மிகச்சரியே என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் , மோடி அரசின் செயலுக்கு  ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மத்திய அரசு நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனத்தில் கொண்டு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பயன் தருகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்போது தான் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொடிய நோய் பரவல், 21 நாள் ஊரடங்கு, அச்சம், பீதி, அனைத்து தொழிலும் முடக்கம், பொருளாதாரமின்மை போன்றவற்றால் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது.

வளர்ந்த நாடுகளே கரோனாவில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்ற வேளையில் வளரும் நாடான நம் இந்திய தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல.

கரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத, குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயினால் பாதிக்கப்படுகின்ற நாட்டு மக்களை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் பொருளாதாரத்தை ஈர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், எம்.பி.க்கள், ஆளுநர்கள், ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோரின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதும் வரவேற்கத்தக்கது. மேலும், ஒவ்வொரு எம்.பி.யின் 2 ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 10 கோடி ரூபாயானது அரசு நிதியில் சேரும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் ஊதியப் பிடித்தமும், சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியப் பிடித்தமும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்குத் தான் சென்றடைகிறது.

குறிப்பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்கள், அனைத்து யூனியன் பிரதசேங்கள் ஆகியவற்றில் உள்ள பெரு நகரம் முதல் குக்கிராமம் வரையுள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்க வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியும் – தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்மை பயக்கும்.

இந்த முடிவு பொதுமக்களுக்கு பலன் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் போது அதனை வரவேற்க வேண்டுமே தவிர அரசியலாக்கக் கூடாது. இந்நிலையில், மத்திய அரசுக்கு நிதியாக கிடைக்கின்ற ஒவ்வொரு ரூபாயும் சிறுதுளி பெருவெள்ளமாக மாறி மக்களுக்கு பெரும் பயன் தர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாடே துணை நிற்க வேண்டும்.

எனவே, கரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் மீட்டெடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தமாகா சார்பில் வரவேற்று, நாட்டு மக்களை கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விரைவில் பாதுகாத்து, பாதிக்கப்படுகின்ற மக்களின் பொருளாதாரத்தை சீர் செய்து மக்கள் நலன் காக்க வேண்டும்”

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.