ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள்!:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சசிகுமாரின்  உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று சென்னையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த ஃபைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டல்தான் காரணம் என்று அவர் எழுதிவைத்ததாக கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் அசோக்குமார் மரணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார் நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால். அவருடன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட சிலரும் இந்த சந்திப்பில் பங்குகொண்டனர்.

அப்போது விஷால், “தனது மரணத்துக்குக் காரணம், ஃபைனான்சியர் அன்புச் செல்வன்தான் காரணம் என்று அசோக்குமார் எழுதி வைத்திருக்கிறார். அன்புச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ வந்தால் அவர்களையும் விடமாட்டோம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், “அன்புச்செழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்களா” என்று கேட்டனர்.

உடனே அங்கிருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “தனது தற்கொலைக்கு  அன்புச்செழியன்தான் காரணம் என்று அசோக்குமார் எழுதி வைத்திருக்கிறார். ஆனால் இப்போது வரை அன்புச்செழியன் கைது செய்யப்படவில்லை. இதிலிருந்தே அன்புச்செழியனுக்கு அரசியல் ஆதரவு இருப்பது தெரியவில்லையா” என்று கேள்வி எழுப்பினார்.

ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது பல ஆண்டுகளாகவே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பிரபல தயாரிப்பாளர் ஜீ.வி. தற்கொலை செய்துகொண்டதற்கு இவர்தான் காரணம் என்றும்  அப்போது கூறப்பட்டது. அதேபோல, இவரும் இயக்குநர் பாலாவும் இணைந்து நடிகர் அஜீத்தை மிரட்டி பணம் பெற்றதாகவும் கூறப்பட்டது. அமைச்சர்கள் சிலரது பணத்தைத்தான் இவர் வட்டிக்கு விடுகிறார் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,  அன்புச்செழியனுக்கு ஆளுங்கட்சி ஆதரவு உள்ளது என்று வெளிப்படையாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.