சிக்கலான கேள்விகள்.. அதிர்ந்த வைரமுத்து.. அனுமதித்த ஞாநி!

டி.வி.எஸ். சோமு பக்கம்

திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவை பத்திரிகைகளுக்காக பேட்டி எடுப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. மிகுந்த திட்டமிடல் உள்ள அவர், தன்னை நோக்கி விமர்சனங்கள் வரும்படியான சூழலை ஏற்படுத்திக்கொள்ளவே மாட்டார்.

“முன்னதாகவே கேள்விகளை கேட்டு வாங்கிவிடுவார்… தானும் சில கேள்விகளை ( பதில்களையும்தான்!) சேர்ப்பார்” என்று சொல்லப்படுவது உண்டு.

“விண்நாயகன்” இதழில் நான் பணிபுரிந்தபோது, (2000 அல்லது 2001)  என். நண்பனும் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் புகைப்படகாரருமான வைய்ட் ஆங்கிள் ரவிசங்கர் மூலம்  வைரமுத்துவிடம் பேட்டிக்கு நேரம் வாங்கினேன்.

அப்போதுதான் வைரமுத்துவின் தொடர் ஒன்றுக்காக, தேனி பகுதிகளுக்கு அவருடன் சென்று படங்கள் எடுத்து வந்திருந்தார் ரவிசங்கர். “அது குறித்து பேட்டி எடுக்கலாம்” என்று ரவிசங்கரிடம் சொல்லித்தான் வைரமுத்துவின் நேரம் கிடைத்தது.

சென்னை டிரஸ்ட் புரத்தில் இருக்கும் அவரது வீட்டு மாடியில் சந்திப்பு. உடன், புகைப்படக்காரர் சிநேகிதன்.

வைரமுத்துவின் படைப்புகள் குறித்து சில கேள்விகளைக் கேட்டேன். ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. ஏனென்றால் அவரது படைப்புகள் பற்றி அவரும், பிறரும் பாராட்டி நிறைய வந்துவிட்டன. அவற்றையே தனி தொகுப்பாக்கும் அளவுக்கு.

எனது நோக்கம், அவர் மீதான விமர்சனங்களுக்கு அவரது பதில்.

ஆகவேதான் சம்பிரதாயமாக அவரது படைப்புகள் குறித்த சில கேள்விகளுக்குப் பிறகு, வேறு கேள்விகளுக்கு வந்தேன்.

“சாதிமத பேதமில்லாதவராக அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீீங்கள் சாதி சங்க கூட்டத்தில் பங்கேற்றீர்களே..”

“ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் என்கிற அப்துல்ரகுமான் வரியை தனதாக்கிக்கொண்டீர்களே…

இதை குறிப்பிட்டு “பா நிறை கவர்தல்” என்று உங்களது பாடல் திருட்டு குறித்து கவிஞர் அறிவுமதி தனி புத்தகமே எழுதினாரே..”

“பிற (இளைய) கவிஞர்கள் குறித்து கருத்துக்களைச் சொல்வதே இல்லையே..”

– இப்படி.பல கேள்விகள்..!

இது போன்ற கேள்விகளை வைரமுத்து எதிர்பார்க்கவில்லை.

ஆரம்பத்தில் “தம்பி, வாருங்கள்” என்று அன்போடும் (!) கம்பீரத்தோடும் வரவேற்ற அவர்,  பிறகு ” அதாவது சார்.. இதாவது சார்..” என்று கேள்விகளுக்கு ஏதேதோ பதிலாகச் சொல்லி முடித்தார்.

அவரது மாடி அறையிலிருந்து இறங்கினேன். உடன் அவரும்.

இற ங்கும்போதே, “நீங்க சினிமா ரிப்போர்ட்டருன்னு ரவிசங்கர் சொன்னான். அதான் பிஸியான நேரத்திலும் டைம் கொடுத்தேன் ” என்று வருத்தமான தொணியில் கூறினார் வைரமுத்து.

வைரமுத்து – ஞாநி

வீட்டு போர்டிகோ அருகில் அவரை நிற்கவைத்து புகைப்படம் எடுக்கச்சொன்னேன் புகைப்படக்காரர் சிநேகிதனிடம்.

காரணம், போர்டிகோ  தூணில் வேல் அம்பு என்று ஏதேதோ பதிக்கப்பட்டிருந்தது. அதற்கு குங்குமமும் வைக்கப்பட்டிருந்தது. பகுத்தறிவு பேசுபவர் வீட்டில் இப்படி இருந்தது வித்தியாசமாகப்பட்டது. அதுதான்.

பிறகு, புகைப்படக்காரர் சிநேகிதனின்  இரு சக்கர வாகனத்தில்  அலுவலகம் சென்றடைந்தேன்.

பத்திரிகை ஆசிரியர் ராவ் சிரித்துக்கொண்டே, “வைரமுத்து போன் பண்ணி வருத்தப்பட்டார். இந்த பேட்டியை அப்புறம் வச்சுக்கலாம்” என்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலக…   ஞாநி ஆசிரியனார்.

அவரிடம், வைரமுத்து பேட்டி குறித்துச்  சொன்னேன்.

அதே இதழில் வெளியிடச் சொன்னார்.

உற்சாகமாக எழுதினேன். அந்த இதழில் வைரமுத்துவின் பேட்டி வெளியானது.

அதே நேரம் ஒரு சிறு வருத்தம். வீட்டின் தூண் அருகில் அவரை வைத்து எடுத்த படங்கள் தொலைந்துவிட்டிருந்தன. ஆகவே வேறு படங்களை வைத்து அவரது பேட்டி வெளியானது.

ஞாநியின் மறைவுச் செய்தி கேட்டதும் நினைவுக்கு வந்தது.

ஆழ்ந்த இரங்கல்கள்.

கார்ட்டூன் கேலரி