ரேகுடா, கர்நாடகா

மோடிக்கு வாக்களித்த மக்கள் தங்கள் குறைகளை மோடியிடம் கூற வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி மக்களிடம் கூறி உள்ளார்.

கர்நாடக மாநிலம் கரேகுடா பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.    இதற்கு அந்த பகுதி மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது.    அந்த சமயத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் மக்கள் அரசு மீது கோபத்தில் உள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.   இதனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி அப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியில் உள்ளார்.  இந்நிலையில் அவர் கிராம விஜயம் என்னும் நிகழ்வுக்காக அந்த பகுதி வழியே பேருந்தில் சென்றுள்ளார்.

மக்கள் பேருந்தை வழிமறித்து வேலை வாய்ப்பு அளிக்கக் கோரி கோஷமிட்டுள்ளனர்.   ஆத்திரம் அடைந்த குமாரசாமி, “எனது வழியை மறித்தால் உங்கள் மீது தடியடி நடத்த உத்தரவிடுவேன்.  நீங்கள் மோடிக்கு வாக்களித்து விட்டு என்னிடம் உங்கள் குறைகளை தீர்க்க சொல்வது சரி இல்லை.  மோடியிடம் சென்று உங்கள் குறைகளை கூறுங்கள்” என கூறி விட்டு சென்றுள்ளார்.

இதற்கு மாநில பாஜக செயலர் ரவி, “குமாரசாமி கர்நாடகாவுக்கு முதல்வரா அல்லது ம ஜ த கட்சிக்கு முதல்வ்ரா?  அவர் அரசியல் அமைப்புப்படி பதவி ஏற்றாரா அல்லது மஜத அமைப்புப் படி பட்டம்  ஏற்றாரா?   மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் முதல்வர் என்னும் முறையில் கூறி உள்ளனர்.  அவர் தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே முதல்வர் என நினைத்தால் அவர் முதல்வர் பதவிக்கு சரியானவர் அல்ல” என தெரிவித்துள்ளார்.

குமாரசாமி, “குறை கூறிய மக்களிடம் 15 நாட்கள் அவகாசம் நான் கேட்கும் போதே எனது பாதையை அவர்கள் மறித்தார்கள்.   இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை உள்ளது  என்றாலும் எப்போதும் அப்படியே இருக்காது.   எனது கிராம விஜயம் நிகழ்வை பாழாக்க சிலர் செய்யும் திட்டத்தின் வெளிப்பாடே இந்த போராட்டம் ஆகும்” என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறி உள்ளார்.