போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே – ஒபிஎஸ்

சென்னை:
போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைதான். எளிய மக்களின் வாழ்க்கத்தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம். தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம். மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காதபோதும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று தந்துள்ளோம். மத்தியில் உள்ள ஆட்சியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை ஆனால் எய்ம்ஸ் வந்து சேர்ந்திருக்கிறது என்றார்.

ஒபிஎஸ் தன்னுடைய உரையின் இறுதியில் போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே என்றார்

வழக்கமாக தொண்டர்களை அதிமுக இரத்தத்தின் இரத்தங்கள் என்றும், திமுக உடன்பிறப்புகள் எனவும் அழைக்கும் என்பது குறிபிடத்தக்கது.