பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஜாம்ஷெட்பூர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கோவா அணி, இத்தொடரில் தனது 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில், கோவா அணியின் ஜார்ஜ் ஆர்டிஸ் ஒரு கோலடித்து, தனது அணிக்கு முதல் முன்னிலைப் பெற்று கொடுத்தார். அதன்பிறகு கோல்கள் எதுவும் விழாத காரணத்தால், முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கணக்கில் முடிந்தது.

அதன்பிறகு, இரண்டாவது பாதி ஆட்டத்தில், கோவா அணியின் ஜார்ஜ் ஆர்டிஸ் மற்றொரு கோலடித்தார். இதனால், அந்த அணிக்கு வலுவான முன்னிலை கிடைத்தது. ஆனாலும் அசரவில்லை அந்த அணி.

அந்த அணியின் இவான் கான்சலோஸ் 89வது நிமிடத்தில் ஒரு கோலடித்து, கோவா அணிக்கு அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்று கொடுத்தார். ஆனால், ஜாம்ஷெட்பூர் அணியால் ஒருகோல் கூட அடித்து பதிலடி கொடுக்க முடியவில்லை.

தற்போதைய நிலையில், மொத்தம் 18 புள்ளிகள் பெற்றுள்ள கோவா அணி, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.