கோவா முதல்வர், அமைச்சர்கள் உடல் நலம் பாதிப்பு…..அரசு செயல்பாட்டில் கவர்னர் தலையிட வேண்டும்: காங்கிரஸ்

கோவா:

கோவா முதல்வர், அமைச்சர்கள் சிலர் உடல் நலம் பாதித்திருப்பதால் அரசு செயல்பாட்டில் கவர்னர் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கோவா முதல்வர் -மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மூன்று மாதங்கள் சிகிச்சை முடிந்து ஜுன் 14ம் தேதி நாடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார். தற்போது மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

முதல்வரை தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரான்சிஸ் டி’சோசாவும் உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றுள்ளார். மின்துறை அமைச்சர் மட்காக்கரும் மூளை பாதிப்பு நோயால் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமாகாந்த் கலாப் கூறுகையில்,‘‘முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில் அமைந்துள்ள அரசு கடந்த 6 மாதங்களாகவே அரசியலமைப்பு ரீதியான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. முதல்வர் உடல்நலக்குறைவை தொடர்ந்து 2 அமைச்சர்களும் உடல்நலம் பாதித்துள்ளனர்.

அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்தனை செய்வோம். ஆனால் கோவாவில் அரசு செயலற்று இருப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அதனால் கவர்னர் தலையிட வேண்டும்’’ என்றார்.