வெகுநாட்களுக்குப் பின் வெளியுலகம் கண்ட கோவா முதல்வர்

னாஜி

கோவா முதல்வர் இரு மாதங்களுக்கு பிறகு பனாஜியில் கட்டப்பட்ட இரு பாலங்களை பார்வையிட்டுள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோய்க்காக டில்லி, மும்பை ,  அமெரிக்கா என பல இடங்களில் மாறி மாறி சிகிச்சை பெற்று வந்தார்.    கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.   ஆயினும் அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்துக் கொள்ளவில்லை.

முதல்வர் இவ்வாறு உடல்நலம் குன்றி இருப்பதால் கோவா மாநில நிர்வாகம் சரியாக நடப்பதில்லை என கோவா மாநில எதிர்க்கட்சிகள் குறை கூறி வந்தன.   முதல்வரை மாற்ற சொல்லி கோரிக்கைகள் பல எழுப்பிய போதிலும் இது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வெளியே வந்துள்ளார்.  கடந்த அக்டோபர் 14 முதல் வெளியுலகம் அவரை காணாத போது தற்போது அவர் இரு நிகழ்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

பனாஜி நகரையும் வடக்கு கோவாவையும் இணைக்கும் பாலம் ஒன்று மண்டோவி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.  இந்த பால க் கட்டுமானம் அடுத்த வருடம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பாலப் பணிகளை நேற்று மனோகர் பாரிக்கர் நேரில் பார்வை இட்டுள்ளார்.

பனாஜி நகரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள அகசைம் என்னும் ஊரில் ஜுவாரி நதியில் மற்றொரு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.   இங்கும் முதல்வர் மனோகர் பாரிக்கர் பார்வை இட்டுள்ளார்.    அவர் காரை விட்டு இறங்கி நடந்து சென்று பாலக் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலையை குறித்து விசாரித்துள்ளார்.

ஏற்கனவே வட இந்தியாவில் மூன்று மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ள நிலையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் வீட்டை விட்டு வெளி உலகம் வந்து பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.