மும்பை:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோய் காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவா மாநில பாஜக முதல்வராக இருப்பவர் மனோகர் பாரிக்கர். கடந்த 15ம் தேதி மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஃபுட் பாய்சன் காரணமாக காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் வழக்கமான பரிசோதனை என்று முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், மனோகர் பாரிக்கர் 4ம் நிலை கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாக்டர் ஜெநாத்தின் தீவிர கண்காணிப்பில் மனோகர் பாரிக்கருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணைய புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், தெற்கு கோவா எம்.பி நரேந்திர சாவாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ டாக்டர்கள் அறிவுரை பேரில் கணைய அலற்சிக்கான சிகிச்சை முதல்வருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முறை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. ஆனால், குணம் ஆக சற்று கால தாமதம் ஏற்படும்.

சிறந்த மருத்துவ வல்லுனர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைந்து குணமடைய அவைரும் இறைவனை வேண்டிக் கொள்வோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு தீவிர வயிற்று வலி காரணமாக மனோகர் பாரிகருக்கு கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் தான் அவர் மும்பை அழைத்து வரப்பட்டுள்ளார். முதல்வர் டிஸ்சார்ஜ் ஆவது அல்லது கோவா திரும்புவது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆனால், இந்த தகவல்களை மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. ‘‘முதல்வர் நோய் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் புரளியே. இதில் உண்மை தன்மை இல்லை. அவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று லீலாவதி மருத்துவமனை துணைத் தலைவர் அஜய்குமார் பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனோகர் பாரிக்கரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.