ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது கோவா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிரான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது கோவா அணி.

போட்டி துவங்கியதிலிருந்து கோலடிக்க இரு அணிகளும் முயற்சி செய்தன. இந்நிலையில், 33வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்டீபன் ஒரு கோலடித்து தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். இதனால், முதல்பாதி ஆட்டம் 1-0 என்ற கணக்கில், ஜாம்ஷெட்பூர் அணிக்கு சாதகமாக முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், கோவா அணியின் அங்குலோ கோல் அடித்தார். இதே அங்குலோ, போட்டியின் கடைசி நிமிடங்களில் மற்றொரு கோலடித்து, கோவா அணியை முன்னிலைப் பெற செய்தார்.

ஜாம்ஷெட்பூர் அணியின் கடைசி முயற்சிகள் பலனளிக்காமல் போகவே, இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் கோவா வென்றது.