பனாஜி: கோவா மாநிலத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த கோவா முன்னணி கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் முதல்வராக இருக்கிறார்.

இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கோவா முன்னணியின் தலைவர் விஜய் சர்தேசாய், முன்னாள் துணை முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக, கோவா முன்னணியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு, விஜய் சர்தேசாய் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது; பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு, ஊழல் நிறைந்ததாகவும், நேர்மையற்றதாகவும் செயல்படுவதால், கூட்டணியில் இருந்து விலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவா முன்னணிக்கு, மாநில சட்டசபையில், மொத்தம் 3 சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர்.