ஜெயலலிதாவுடன் பாரிக்கரை ஒப்பிடும் கோவா அமைச்சர்

னாஜி, கோவா

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை குறித்து கோவா மாநில அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

கணைய அழற்சி நோயால்  பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மும்பையில் சிகிச்சை செய்துக் கொண்டார்.   ஆயினும் அவருக்கு உடல்நிலை சீராகததால் அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார்.   உடல் நலம் தேறி மீண்டு வந்த முதல்வர் மீண்டும் நோய்வாய்ப்பட்டதால்  தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவா மாநிலத்தில் முதல்வர் உடல்நிலை சீர்கேட்டால் ஆட்சி சரியாக நடைபெறவில்லை என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.  மேலும்  பாஜக ஆட்சியை அகற்றி தங்களுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.   இது கோவா மாநிலத்தில் மட்டுமின்றி நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கோவா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சுதின் தவாலிகர் நேற்று ஒரு நிகழ்வில் பங்கேற்றார்.   இவர் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.  இவரிடம் அந்நிகழ்வில் கலந்துக் கொண்ட செய்தியாளர்கள் கோவா முதல்வர் உடல்நிலை குறித்தும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு அமைச்சர், “சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்பட்டிருந்தார்.   அதை எந்த பத்திரிகையாளரும் பிரச்சினை ஆக்கவில்லை.   ஆனால் மனோகர் பாரிக்கர் உடல் நிலையை மட்டும் பிரச்சினை ஆக்குவது ஏன் என புரியவில்லை.  விரைவில் கோவாவின் அனைத்து பிரச்சினைகளையும் முதல்வர் பாரிக்கர் தீர்த்து வைப்பார்” என பதில் அளித்தார்.