கோவா : அமைச்சரின் ஆபாச வீடியோ சர்ச்சை

னாஜி

கோவா மாநில மீன்வளத்துறை அமைச்சரின் ஆபாச வீடியோ பற்றி பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் எனக் கூறப்படும் கோவாவில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளவர் வினோத் பாலின்கர்.   இவர் கோவா ஃபார்வார்ட் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.   வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஏரெஸ் ரோட்ரிக்யூஸ் சமீபத்தில் வினோத் பாலின்கர் தனது தொகுதியில் உள்ள ஒருவருடன் உள்ள ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும்,  அதனால் வினோத் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து ஏரெஸ், ”கோவாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள அமைச்சரின் சியோலிம் தொகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் அமைச்சர் வினோத் பாலின்கர் நெருக்கமாக உள்ள ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது.   அமைச்சர் பதவியில் தொடர லாயக்கற்றவர்.   எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.  இது தொடர்பாக நான் கோவாவின் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.  அவரை சந்திக்கும் போது அமைச்சர் நடத்திய பாலியல் லீலைகளைப் பற்றி கவர்னரிடம் தெரிவிப்பேன்” எனக் கூறி உள்ளார்.

கோவா ஃபார்வர்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிராஜனோ டெமெல்லோ இதை போலியான வீடியோ எனக் கூறியுள்ளார்.   மேலும், “அமைச்சர் போதை மருந்து வியாபாரத்தை வடக்கு கோவா கடற்கரைப் பகுதியில் முழுமையாக ஒழுத்துள்ளார்.  அதனால் அவரைப் பற்றிய தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.   எங்கள் கட்சியின் தலைவர் ஏற்கனவே இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் அந்த சமூக ஆர்வலர் ஏதோ ஒரு போதை மருந்து விற்பனையாளரின் கையாளாக இருப்பார் என்பதை தெரிவித்துள்ளார்.” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து அமைச்சர் வினோத் பாலின்கர், “அந்த வழக்கறிஞர் சொல்வதற்கு எதுவும் ஆதாரமே இல்லை.   அந்த வீடியோவில் உள்ளது நான் என்றால் அவர் என்னிடம் ஏன் சொலவில்லை.   இது பொதுவான விஷயம்.  இதில் எதற்கு இவ்வளவு ரகசியம்.  நான் நிச்சயமாக இது என்னால் ஒழிக்கப்பட்ட கோவாவின் போதை மருந்து வியாபாரிகளில் ஒருவரின் சதிதான் என நிச்சயமாக சொல்லமுடியும்” என தெரிவித்துள்ளார்.