Random image

மனோகர் பாரிக்கர் உடல் நிலை பாதிப்பு…கோவா அரசியலில் நெருக்கடி நிலை

பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நிலை பாதித்துள்ளது. இதனால் டில்லி எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனோகர் பாரிக்கர் உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் இருப்பதால் கோவாவில் அரசியல் குழப்பமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. கோவா கவர்னர் மிரிதுலா சின்ஹாவை காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினர். தற்போது வரை மனோகர் பாரிக்கர் தான் முதல்வராக இருக்கிறார். அவரது தலைமையிலான கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. எனினும் உடல் நிலை பாதிப்பு காரணமாக மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு பாஜக தலைமைக்கு அவர் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் அளித்துள்ள மனுவில்,‘‘மாற்று அரசு அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தை கலைக்க கூடாது. அதற்கு பதிலாக ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘‘நாங்கள் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிப்போம்’’ என்று எதிர்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் தெரிவித்துள்ளார்.

கோவாவில் மாற்றம் வர வேண்டும் என்று காங்கிரஸ் மட்டுமின்றி, பாஜக கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா கோமாதக் கட்சியும் மாற்றத்தை விரும்புகிறது. மூத்த அமைச்சரிடம் கோவா அரசின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அதன் தலைவர் தீபக் தவாலிகர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பாஜக தலைமைக்கு அவர் தெரிவித்துவிட்டார்.

எனினும் அமைச்சரவையில் மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில் பார்த்தால் தீபக் தவாலிகரின் மூத்த சகோதரர் சுதின் தவாலிகர் தான் உள்ளார். அதனால் இவரை தேர்வு செய்யும் முடிவுக்கு மற்றொரு கூட்டணி கட்சியான கோவா முன்னேற்ற கட்சி ஒத்துக் கொள்ளாத நிலை உள்ளது. இக்கட்சியும், 3 சுயேட்சசைகளின் ஆதரவுடன் தான் கோவா அரசு பெரும்பான்மை பலத்துடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலை காரணமாக பாஜக.வுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ள்ளது.