னாஜி

கோவா மாநில பாஜக காரியதரிசி சதானந்த் முதல்வர் உடல்நிலை குறித்த ஊகங்களை செய்திகள் ஆக்க வேண்டாம் என ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மாதம் 15ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அப்போது அவர் கணைய அழற்சியின் காரணமாக அனுமதிக்கப் பட்டதாக கூறப்பட்டது.   அதன் பிறகு அவர் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.    அவர் கோவா சட்டசபையில் அம்மாநில வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார்.

அதன் பிறகு மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் தலைநகர் பனாஜியில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்துக்காக சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது.   இந்த மாதம் 1ஆம் தேதி வீட்டுக்கு திரும்பிய அவர் ஓய்வில் உள்ளார்.   அவரைப் பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை.

அவர் உடல்நிலை பற்றி இதுவரை எதுவும் கருத்து சொல்லாத பாஜக தற்போது முதல் முறையாக அது குறித்து நேற்று ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தியது.   அப்போது மாநில காரியதரிசி சதானந்த், “முதல்வர் நல்ல சுகமுடன் உள்ளார்.   அவர் தினமும் அவரிடம் வரும் கோப்புகளை படித்து முடிவுகள் எடுத்த வண்ணம் உள்ளார்.   மருத்துவர்களின் ஆலோசனை காரணமாக அவர் யாரையும் சந்திக்க வில்லை.   ஊடகங்கள் தயவு செய்து அவரவர் ஊடகங்களை செய்தி ஆக்க வேண்டாம்”  என கூறினார்.

அப்போது கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கரும் உடன் இருந்தார்.  அவர், “கோவாவில் உள்ள அனைத்து இன மக்களும் அவர் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்தனர்.   அந்த பிரார்த்தனையால் அவர் நலமாக உள்ளார்.   அதனால் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஊடகங்கள் பரப்ப வேண்டாம்”  என கேட்டுக் கொண்டார்.