கொலம்பியாவை அடுத்தச் சுற்றுக்கு நகர்த்திய கோல் கீப்பர்..!

நெட்டிசன்:

 saravanan savadamuthu அவர்களின் முகநூல் பதிவு:

குரூப் ஹெச் பிரிவில் கொலம்பியா, ஜப்பான், செனகல், போலந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற தகுதிச் சுற்றின் கடைசி போட்டிக்கு முன்பு செனகலும், ஜப்பானும் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற முன்னணியில் இருந்தன.

ஆனால் போட்டிகளின் முடிவில் கொலம்பியாவும், ஜப்பானும் அதிர்ஷ்டவசமாக அடுத்த சுற்றான நாக் அவுட்டிற்கு தகுதி பெற்றுள்ளன.

செனகலும், கொலம்பியாவும் மோதிய ஆட்டம் இரு அணிகளுக்குமே அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டிய ஆட்டம் என்பதால் மிக முக்கியமானதாகவே அமைந்திருந்தது.

 

இரு அணிகளுமே மிகச் சிறந்த வீரர்களைக் கொண்டிருந்தாலும் பாஸிங் செய்வதில் கொலம்பியாவைவிடவும் செனகல் வீரர்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது கண்கூடாகத் தெரிந்தது.

ஆனால் அதே சமயம் செனகல் அணி வீரர்கள்தான் அதிகமாக கோல் அடிக்கும்வகையில் ஷாட்டுகளை உதைத்துத் தள்ளினார்கள். அப்படியிருந்தும் அதிர்ஷ்டம் அவர்களுக்குக் கை கொடுக்காததால்தான் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தார்கள்.

பாராட்டுக்குரியவர் கொலம்பிய அணியின் கோல் கீப்பர்தான். கிட்டத்தட்ட 10 கோல் வாய்ப்புகளைத் தடுத்து செனகலை பிளைட் ஏற வைத்திருக்கிறார். பாராட்டுக்கள் அவருக்கு..!

11-வது நிமிடத்தில் கொலம்பியாவின் 9-ம் எண் வீரர் செர்பிய வீரரை கீழே தள்ளியதால் ப்ரீ கிக் வாய்ப்பு செனகலுக்குக் கிடைத்தது. ஆனால் அது கோலாகவில்லை.

16-வது நிமிடம் கொலம்பியாவின் கோல் போஸ்ட் பகுதியில் செனகலின் 23-ம் எண் வீரருக்கு செனகல் வீரர்கள் கட்டைக் கால் கொடுத்து கவிழ்த்தார்கள். இதற்கு முதலில் பெனால்டி கொடுத்தார் நடுவர்.

ஆனால் கொலம்பிய வீரர்கள் இதற்கு ஆட்சேபணை தெரிவித்ததால் நடுவர் மூன்றாவது நடுவரை அணுகினார். அங்கேயிருந்தும் தெளிவான பதில் வராமல் போக.. தானே டிவி பாக்ஸுக்கு போய் ரீப்ளேயில் பார்த்துவிட்டு வந்து அது பெனால்டி இல்லை என்று அறிவித்தார். இது செனகல் அணியினருக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி.

24-வது நிமிடத்தில் செனகல் வீரரின் காலை மிதித்து கீழே விழுக வைத்ததால் அந்த அணிக்கு ஒரு ப்ரீ கிக் கிடைத்தது. நிச்சயம் கோலாகும் என்று பார்த்தால் அடித்த பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே பறந்து போய் கேலரியில் விழுந்தது.

27-வது நிமிடத்திலும் செனகல் அணி தொடர்ச்சியாக இரண்டு முறை கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டது. இரண்டு முறையும் கோல் கீப்பர் அதைத் தடுத்து பந்தை தன் வசப்படுத்திக் கொண்டார்.

34-வது நிமிடத்தில் செனகல் வீரர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க இதிலும் ஒரு அருமையான சான்ஸ் கிடைத்தது. கொலம்பியாவின் கோல் கீப்பரின் கைகளில் பட்ட பந்து மீண்டும் தரையில் உருண்டு செனகல் வீரர்களின் கால்களுக்குப் போனது. அதை அவர்கள் மீண்டும் உதைக்க.. இப்போதும் கொலம்பிய கோல் கீப்பர் அதனை கச்சிதமாக மார்போடு பிடித்துக் கொள்ள.. வெறுத்தே போனார்கள் செனகல் வீரர்கள்.

36 மற்றும் 40-வது நிமிடங்களிலும் செனகல் வீரர்கள் கொலம்பியாவின் முன் களத்தை உடைத்தெறிந்து கோல் போட எத்தனித்தார்கள். ஆனால் அதிர்ஷ்டம் கை கூடாததால் இதுவும் முடியவில்லை.

44-வது நிமிடத்தில் திடீரென்று எங்கிருந்தோ வந்த கொலம்பிய வீரர் செனகலின் 17-ம் எண் வீரரை பட்டவர்த்தனமாய் இடித்துக் கீழே தள்ள.. ப்ரீ கிக் உடனேயே கிடைத்தது. கிடைத்து என்ன பிரயோசனம்..? பந்து இப்போதும் கோல் போஸ்ட்டுக்கு மேலேயே பறந்தது.

69-வது நிமிடத்தில் கொலம்பியா அணி கோல் போட எத்தனித்தது. ஆனால் செனகல் கோல் கீப்பரின் கைகளைத் தாண்டி அதனால் செல்ல முடியவில்லை.

மீண்டும் விடாப்பிடியாக இரண்டு அணி வீரர்களும் பந்தை மைதானத்தில் ஆளுக்கொரு பக்கமாக உருட்டிக் கொண்டேயிருந்தார்கள்.

74-வது நிமிடத்தில் கொலம்பிய வீரர்களுக்கு கார்னர் ஷாட் கிடைத்தது. இதில் கிடைத்த பந்தை கொலம்பிய வீரர் தலையால் முட்டி கோலுக்குள் அனுப்ப.. அது கோலானது.

தங்களுடைய முதல் தடை உடைத்தெறியப்பட்டதை உணர்ந்து வீரர்களும், கேலரியில் இருந்த கொலம்பியன் ரசிகர்களும் அந்த நிமிட இன்பதை அனுபவித்து உணர்ந்து கை தட்டி மகிழ்ந்தார்கள்.

இதன் பின்பு செனகல் அணி வீரர்களின் கோல் வேட்டை வெறியாகவே மாறிப் போனது.

76 மற்றும் 77-வது நிமிடங்களில் செனகல் அணி வீரர்கள் அடித்த பந்துகளை கொலம்பிய கோல் கீப்பர் தடுத்து நிறுத்திவிட ஏமாற்றமாயினர் செனகல் வீரர்கள்.

இதற்கடுத்த 13 நிமிடங்களும் போர்.. போர்தான். ஆனால் இரு அணியினராலுமே கோல் அடிக்க முடியவில்லை.

கடைசியில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா போட்டியை வென்று அடுத்த நாக் அவுட் சுற்றுக்குள் கால் பதித்தது.

எதிர்பாராத இந்தத் தோல்வியால் செனகல் அணி வீரர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.

அவர்கள் மட்டுமா.. செனகல் நாட்டின் பாரம்பரிய நடனத்தை ஆடியபடியே போட்டியை ரசித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர், ரசிகைகளும் சோர்ந்து போயினர்.

இதே நேரம் கொலம்பிய ரசிகர்களோ இசைக் கருவிகளை இசைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

செனகல் அணி அதே 4 புள்ளிகளுடனும் இருந்தது , கொலம்பியா அணி வெற்றி பெற்றதால் 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தை அடைந்தது.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வேறொரு கூத்து நடந்தது.

இதே நேரம் நடந்த இதே குரூப்பின் வேறொரு மேட்ச்சில் ஜப்பானும், போலந்தும் மோதின. இதில் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இப்போது புள்ளி பட்டியலில் ஜப்பானும், செனகலும் தலா 3 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனால் Fault Option Points என்ற கணக்கில் ஜப்பான் மைனஸ் 4 புள்ளிகளும், செனகல் மைனஸ் 6 புள்ளிகளும் பெற்றிருந்ததால் ஜப்பான் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தோற்றாலும் எதிர்பாராமல் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஜப்பானிய வீரர்களால் இதனை நம்பவே முடியவில்லை. இதற்கு வழி வகுத்தது செனகலின் தோல்விதான்.

ஆக.. கால்பந்தில் வெற்றியை தீர்மானிப்பது அதிர்ஷ்டம் என்பது மட்டுமே உண்மை..!