வேலிதாண்டிய வெள்ளாடும் – பயிரை மேய்ந்த வேலியும்

சென்னை :

2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.இ.அ.தி.மு.க-வின் வளர்மதியை எதிர்த்து போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ. ஆனவர் கு.க. செல்வம், அதற்கு முன் சிலகாலம் அ.தி.மு.க-வில் இருந்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக எம்.எல்.ஏ. வாக இருக்கும் ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர்கள் அவரது பெயரை மறந்திருந்த நிலையில், தற்போது 2021-ம் ஆண்டு தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது பெயரை நினைவு படுத்தும் விதமாக தி.மு.க வில் இருந்து பா.ஜ.க. பக்கம் சாய்ந்திருக்கிறார்.

நாடு முழுதும் கட்சி தாவும் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. களின் புகலிடமாக மாறிவரும் பா.ஜ.க., அவர்களுக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்தவில்லை மாறாக எம்.எல்.ஏ. க்களை அழைத்துக்கொண்டு கட்சி தாவும் தலைவர்களுக்கு எம்.பி. பதவியும், எம்.பி.க்களை அழைத்துக்கொண்டு கட்சி தாவும் தலைவர்களுக்கு மந்திரி பதவியும் வழங்கி ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

மேலும், பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துவதற்காக கட்சித்தாவும் எம்.எல்.ஏ. க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பெரும்பான்மை இழந்த அரசுகளை தங்கள் சொல்படி ஆட்டுவித்து பல்வேறு வகையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில், டெல்லி சென்று பா.ஜ.க. தலைவரை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய எம்.எல்.ஏ., கு.க. செல்வத்தை தமிழக பா.ஜ.க. செயலாளர்  கே.டி. ராகவன் தலைமையில் 300 பேர் புடை சூழ சென்னை விமான நிலையத்திற்குள் சென்று  வரவேற்றார்.

சாதாரண நாட்களிலேயே விமான நிலையத்திற்குள் சென்று வழியனுப்பவோ, வரவேற்கவோ கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக சிறப்பு விமானங்கள் மற்றும் சிறப்பு அனுமதியுடன் செல்லும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வேளையில் 300 க்கும் அதிகமானோர் விமான நிலைய வரவேற்பறைக்குள் சென்று கட்சி தாவிய எம்.எல்.ஏ விற்கு சால்வை போர்த்தி வரவேறுப்பளித்தது விதிமீறலாக உள்ளது என பத்திரிகையாளரும் சமூக வலைதள செயற்பாட்டாளருமான சவுக்கு சங்கர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள சவுக்கு சங்கர்,

கட்சி தாவிய எம்.எல்.ஏ. கு.க. செல்வத்தை வரவேற்பதற்காக நேற்று சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு பாஜக தலைவர் கே.டி.ராகவன் வந்திருந்தார், அவருடன் விமானநிலையத்திற்குள் 300 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர் அவர்களில் 50 பேர் நுழைவாயிலைத் தாண்டி வரவேற்பறையில் கூடினர்.

அங்கு கு.காசெல்வத்திற்கு சால்வை வழங்குவது உட்பட ஒரு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது :

1) சாதாரண நாட்களில் ஒரு எல்லைக்கு அப்பால் அனுமதி மறுக்கப்படும்போது, கே.டி.ராகவன் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் வாயிலை கடந்து எப்படி ஒரு பாதுகாக்கப்பட்ட விமான நிலைய பகுதிக்குள் சென்றார்கள் ?

2) இவர்களுக்கு அனுமதி வழங்கியவர் யார்?

3) வாயில் வரை செல்ல சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் ஏதேனும் விதிவிலக்கு வழங்கப்பட்டதா?

4) 300 பேருக்கு எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது

5) சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகம், இந்திய விமான நிலைய ஆணையம் அல்லது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆகியவற்றால் அனுமதி வழங்கப்பட்டதா?

6) உள்ளே செல்ல அனுமதி பெறுவதற்கு, ஒவ்வொரு விண்ணப்பதாரரும்  அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிப்படி,

பாஜக தொண்டர்கள் சமர்ப்பித்த அடையாள ஆவணங்கள் என்ன? அடையாள அட்டைகள் இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கலாமா ?

7) 50 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு வரவேற்பு நிகழ்ச்சி விமான நிலைய பாதுகாப்பு  மண்டலத்திற்குள் நடத்த எவ்வாறு அனுமதிக்கப்பட்டது

8) ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட வரவேற்பறையில் பாஜக தலைவர் கே.டி. ராகவன் முகக்கவசம் அணியாதது ஏன் ?

9) கு.க. செல்வம் சென்னையில் இருந்து டெல்லி சென்று வர ஈபாஸ் வழங்கியவர் யார்?

10) கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், டெல்லி போன்ற தொற்று அதிகமுள்ள மாநிலத்திலிருந்து திரும்பி வரும் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் கட்டாய தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

கு.க. செல்வமோ விமான நிலையம் சென்ற பாஜக தலைவர்களோ அவ்வாறு பரிசோதிக்கப்பட்டார்களா ?

11) இதே பாஜக தொண்டர்கள் அரசின் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றாமல் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ஒன்றுகூடுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்?

12) பாஜக அலுவலகத்திற்குள் போலீஸ் தடுப்புகளை பயன்படுத்த யார் அனுமதித்தது.

இந்த தடுப்புகளை பயன்படுத்த சென்னை நகர ஆணையர் அனுமதி வழங்கியாரா? ஏதேனும் வாடகை வசூலிக்கப்பட்டதா?

என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார் சங்கர். வெள்ளாடுகள் வேலி தாண்டுவதும் அதற்கு உதவும் வகையில் வேலியே பயிரை மேய்வதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்பது மற்றொரு கேள்வியே.