கொரோனாவில் இருந்து நம்மை கடவுள்தான் காக்க வேண்டும் : கர்நாடக சுகாதார அமைச்சர் கைவிரிப்பு 

பெங்களூரு

கொரோனாவில் இருந்து நம்மை கடவுள்தான் காக்க வேண்டும் என பாஜக ஆளும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உலக அளவில் தினசரி அதிகரித்து வருகிறது.  இந்தியா இதில் மூன்றாம் இடத்தில் உள்ளது.  இந்தியாவில் கர்நாடக மாநிலம் நான்காம் இடத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக  இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது   நேற்று வரை 47,253 பேர் பாதிக்கப்பட்டு 933 பேர் உயிர் இழந்து 18,467 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இது கர்நாடக மக்கள் மத்தியில்  பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு டிவிட்டரில், “இன்னும் இரு மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்,  நம்மை யார் காப்பாற்றுவது?  கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும்” எனப் பதிவு இட்டுள்ளார்.

கொரோனா பரவுதலைத் தடுக்கும் பொறுப்பான இடத்தில் உள்ள சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிவிட்டதற்கு கர்நாடகாவில் பாஜக அரசு மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.