சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை காரணமாக, சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது,  கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதே தமிழக அரசின் லட்சியம் என கூறினார்.

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் அண்டை மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது, கேரளா முல்லை பெரியாரில் தண்ணீர் தேக்குவதை தடுத்து வருகிறது, அதுபோல ஆந்திராவும் கிருஷ்ணாவில் தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்,   சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கோதாவிரி  காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி, தற்போது நடைபெற்று வரும்  குடிமராமத்து பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் மண்பானை செய்பவருக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதே அரசின் லட்சியம் என்றும், அதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு  வருவதாகவும், இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பச்சத்தில் அதன் மூலம் தமிழகத்திற்கு 120 டிஎம்சிக்கு மேல் நீர் கிடைக்கும் என்று  தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண்ணையாறு-செய்யாறு இணைப்பு திட்டம், பெண்ணையாறு-பாலாறு இணைப்பு திட்டம், காவிரி, மேட்டூர் அணை, சரபங்கா, திருமணிமுத்தாறு, அய்யாறு இணைப்பு திட்டம், காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகிய பணிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.