கலவர வழக்கில் இருந்து சாமியார் ராம்பால் விடுதலை!!

ஹிசார்:

இரண்டு கிரிமினல் வழக்குகளில் இருந்து ஹரியானா மாநிலம் சத்லோக் ஆஸ்ரம சாமியார் ராம்பாலை வி டுதலை செய்து ஹிசார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்களை விடுதலை செய்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முகேஷ்குமார் உத்தரவிட்டார்.

ராம்பால் தற்போது சிறையில் உள்ளார். அவர் மீது மேலும் கொலை, கொலை முயற்சி மற்றும் தேச துரோக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளிலும் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. அதனால் ராம்பால் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

‘‘ இரு வழக்குகளில் அவர் விடுதலை செய்யப்பட்டது உண்மைக்கு கிடைத்த வெற்றி’’ என்று ராம்பால் வ க்கீல் ஏபி சிங் தெரிவித்தார். ராம்பால் மீது பொது சொத்துக்கள், மனிதர்களுக்கு சேதம் விளைவித்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது 66 வயதாகும் ராம்பால் ஹிசார் பர்வாலாவில் 12 ஏக்கரில் ஆஸ்ரமம் நடத்தி வருகிறார். கடந்த 1990ம் ஆண்டுகளில் பஜனை பாடகராக ஹரியானாவில் அறிமுகமாகி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் அறிவித்தபோது பெரும் வன்முறை வெடித்தது. இந்த சூழ்நிலையில் கடந்த 24ம் தேதி ராம்பால் மீதான வழக்கில் இன்று 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் அறிவித்திருந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்றத்தின் கைது வாரண்டை அமல்படுத்த சென்ற போலீசாருக்கு, ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். அவரது ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேரை வெளியேற்றிவிட்டு ராம்பாலை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, பணியில் இருந்த அரசு ஊழியர்களுக்கு காயம் ஏற்படுத்தியது, அரசு பணியாளர்களை கிரிமினல் படையை கொண்டு பணி செய்ய விடாமல் தாக்கியது போன்ற பிரிவுகளில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் 2014ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி கலவரம் ஏற்படுத்தியது, சட்ட விரோதமாக கூடுதல், அரசு பணியாளரின் உத்தரவை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் மற்றொரு வழக்கு ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புருசோத்தமன் தாஸ், ராஜ்குமார், மொகிந்தர் சிங், ராஜேந்தர் சிங், ராகுல் மற்றும் 30 முதல் 40 பேர் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதிலிருந்து தான் தற்போது ராம்பாலும், அவரது ஆதரவாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.