சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 14 பேருக்கு ஆயுள் தண்டனை: அரியானா கோர்ட்டு தீர்ப்பு

அம்பாலா:

ரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் மற்றும் அவரது  சீடர்கள்  14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியானாவை சேர்ந்த பிரபல சாமியார் மீதான  2 கொலை வழக்குகளில் அவர் குற்றவாளி என அரியானா நீதி மன்றம் கடந்த 12ந்தேதி  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  இதில் ஒரு வழக்கில் அவரது தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பில்,  சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள்  14 பேருக்கும்  ஆயுள் தண்டனையும் விதித்து அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இரண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் டெல்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால் கொன்றதாக புகார் அளித்தார்.

இரண்டாவது உ..பி.யில் உள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்ஹோரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 2 வழக்குகளில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்களும்  குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு கூறிய நிலையில், இன்று ஒரு வழக்கில தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பிரிவு 302, 343 மற்றும் 120பி கீழ் தண்டிக்கப்படுவதாக கூறி ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.