தெலுங்கானாவில்  கோகுலாஷ்டமியையொடி நடந்த தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் பங்கேற்ற 27 வயது இளைஞர் மனிதப் பிரமிடின் உச்சியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று கோகுலாஷ்டமி பண்டிகை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிராவிலும் அதை அருகேயுள்ள மாநிலங்களிலும் கோகுலாஷ்டமியை ஒட்டி நடத்தப்படும் ‘தஹி ஹண்டி’ என்ற தயிர்ப்பானை உடைக்கும் போட்டி மிகுந்த பிரபலமானது.
மிக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் தயிர்ப்பானையை ஆண்கள் மனிதப் பிரமிடு அமைத்து உடைப்பது விளையாட்டின் வழக்கம். இது பல நேரங்களில் விபரீதத்தில் முடிவதால் இவ்விளையாட்டு குறித்து கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஆணையை உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் மாநிலம் அடில்பாட் மாவட்டத்தில் நடைபெற்ற தஹி ஹண்டி போட்டியில் கப்ளி வினோத் என்ற 27 வயது இளைஞர்  மனித பிரமிடின் உச்சிக்கு ஏறும்போது தவறி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.