கோகுலாஷ்டமி ஸ்பெஷல்  11.08.2020

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்  11.8.20

அஷ்டமி திதியில் அவதரித்தவர் கிருஷ்ணர் என்பதால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

அஷ்டமி ,நவமி போன்ற நாட்களில் சுபகாரியங்கள் செய்வது இல்லை என்ற காரணத்தால்தான் இந்த திதிகளில் பகவான் விஷ்ணு கிருஷ்ணராகவும்,ராமராகவும் பிறந்து அதிக கஷ்டங்களை அனுபவித்து இறுதியில் சாதனையும்,சக்தியும் படைத்தவர்களாகத் திகழ்ந்தார்கள். இந்த நாட்களைச் சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள்.அஷ்டமி,நவமி புனிதமான திதிகள் ஆகும்.இறைவனுக்கு உரிய நாள்கள்.தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள்.

கண்ணைப் போல் நம்மைக் காப்பவர் கண்ணன். ஸ்ரீ கிருஷ்ணரைக் கண்ணன், முகுந்தன், கோபாலா என்று அழைப்பது உண்டு.முகு என்றால் முக்தியை அருள்வது ,கு என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது .இவ்வுலகம் வாழ்வதற்கும்,முக்தியைப் பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற அடிப்படையில் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.

கிருஷ்ணரை நம்பி,வழிபட்டால் வெற்றி நிச்சயம்.மனதால் கண்ணனை நினைத்தால் நன்மைகள் தேடி வரும்.

கீதையில் கிருஷ்ணர்,”நீ எனக்கு ஒரு இலையைக் கொடு அல்லது பூவை கொடு,இல்லை ஒரு பழத்தைக் கொடு.அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு,எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு.சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் ஏற்றுக் கொள்வேன்” என்கிறார்.

கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் கொண்டாடும் விதம் !

கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில் வாசல் தெளித்து,வாசற்படியிலிருந்து பூஜை அறை வரைக்கும் கண்ணனின் பிஞ்சுக் கால்களை மாக்கோலங்களாக இடவேண்டும்.கிருஷ்ணன் தனது மென்பாதங்களை பதித்து ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளுகிறார் என்பது ஐதீகம்.

கிருஷ்ணர் வருகையால் ஆயர்பாடியில் செல்வவளம் பெருகியது போல்,ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகக் கிருஷ்ணரது பாதத்தை அரிசி மாவினால் போடுகிறார்கள்.

அரிசி மாவினால் கோலம் போடுவது ஏன்?

கோகுலத்தில் கண்ணன் தந்து தோழர்களுடன் கோபியர் இல்லம்தோறும் சென்று வெண்ணெய்யைத் திருடி தின்னும்போது,வீடு முழுவதும் வெண்ணெய் இறைபடும்.அவனது கமல மலர்ப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடு முழுவதும் கண்ணனின் பாதசுவடுகள் நிறைந்திருக்கும்.பண்டைக்காலத்தில் மக்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணெய்யினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.அதன் காரணத்தாலேயே இந்நாளில் மாவினால் கோலம் போடுகின்றனர்.

கிருஷ்ணரது சிலையை வைத்து முதலில் நெய் ,தண்ணீர்,பால்,தேன்,தயிர்,கடைசியாகத் தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்குச் சந்தனம் குங்குமம் இட்டு,புஷ்பங்களால் அலங்கரிக்க வேண்டும்.வஸ்திரம் சாத்துவது விசேஷம். கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல்,வெண்ணெய்,நாவற்பழம் ,சீடை,முறுக்கு,அப்பம் ,பாலால் செய்த பலகாரங்கள் போன்றவற்றை நிவேத்தியமாக வைத்து,கிருஷ்ணாஷ்டகம்,ஸ்ரீமத் பாகவதம்,கிருஷ்ணன் கதைகள் சொல்லி கற்பூர ஆர்த்தி காட்ட வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி விரதத்தைக் கணவனும்,மனைவியும் சேர்ந்து அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமாகும்.பகற் பொழுது உபவாசம் இருந்து இரவில்,கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.

கோகுலாஷ்டமி அன்று இருக்கும் விரதமானது, பல்லாயிரம் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதற்குச் சமம்.